வியட்நாம் - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அதன்படி,
பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்காக, வியட்நாமின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மக்கள் பொலிஸ் அகடமி மற்றும் இலங்கை தேசிய பொலிஸ் அகடமி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லுவோங் டேம் குவாங் (General Luong Tam Quang) மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்காக, இலங்கை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வூ ஹாய் குவான் (Mr. Vu Hai Quan) மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரினால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
வியட்நாமின் இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, வியட்நாமிய இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் நுயென் டின் காங் (Mr. Nguyen Dinh Khang) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
வியட்நாமின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கிடையிலான கலாசார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் (Mr. Ho An Phong) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும், இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் (Mr. Ho An Phong) மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மெட்ரிக் தொன் உரத் தொகுதி, வியட்நாம் நிதி அமைச்சர் என்கோ வென் டுவான் (NGO VAN TUAN) மற்றும் Vietnam National Chemical Group பிரதம பணிப்பாளர் நுயென் ஹூ டு (Mr. Nguyen Huu Tu) ஆகியோரால் விவசாய அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025ஆம் ஆண்டு வியட்நாமிற்கு மேற்கொண்ட அரச பயணத்தைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று வியட்நாம் ஜனாதிபதியின் இந்த அரச விஜயம் இடம்பெறுகின்றது.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) உடன் அந்நாட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் குழுவொன்றும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
