Our Feeds


Wednesday, May 13, 2026

Zameera

பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர்


 பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை இன்று (13) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்தத் திறப்பு விழா நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த்தும் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். வருகை தந்த அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, புதிய நிலையம் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.சிறுவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோர் எனப் பல்வேறு தரப்பினரும் தமக்கான சேவைகளைப் பெறப் பல அரச அலுவலகங்களுக்கும், பல மேசைகளுக்கும் ஏறி இறங்க வேண்டியிருந்த சவாலான நிலைமையை மாற்றியமைக்கும் வகையிலேயே இந்த புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சுமார் 60 வகையான சேவைகளை பாதிக்கப்பட்ட மக்கள் இனி ஒரேயிடத்தில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரச திணைக்களங்களின் எல்லைகளைத் தாண்டி, மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு இந்தச் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்பக் கதைகளை ஒவ்வொரு அதிகாரியிடமும் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய நிலைமை இங்கு நீக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் மிகவும் உணர்திறனுடன் பதிவு செய்யப்படுகின்றன. 

தனிநபர்களை நம்பியிருந்த பின்தொடரல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த குழுவினரால் பயனாளிகள் முகாமைத்துவ முறைமையின் ஊடாகச் சேவைகள் டிஜிட்டல் முறையில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. இது அரசாங்கம் குடிமக்களைச் சந்திக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பாரிய நடைமுறைச் சீர்திருத்தமாகும்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 'இந்த நிலையம் வெறுமனே ஒரு கட்டடம் மட்டுமல்ல, எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பதற்கான ஒரு வாக்குறுதியாகும். 

பொதுமக்களின் தேவைகளை எங்களால் நேரடியாகப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், அவர்களை உரிய திணைக்களங்களுக்குச் சரியான முறையில் வழிப்படுத்திவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் பக்கம் நின்று எங்கள் சேவைகளைச் செய்து, அவர்களின் வாழ்வில் ஒரு ஒளிக்கீற்றை ஏற்படுத்த வேண்டும். இந்த நிலையம் கருணையும் செயலும் ஒன்றிணையும் இடமாகவும், எமது மீளெழுச்சியை வலுப்படுத்தும் ஒரு மையமாகவும் அமையும்.

இந்த முன்னெடுப்பை நனவாக்குவதற்குத் தாராளமாக ஆதரவளித்த அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும், ஆசியா அறக்கட்டளையின் (ஏசியா பவுண்டேசன்) தொலைநோக்குச் சிந்தனைக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இங்கு வருகை தந்துள்ள உயர்ஸ்தானிகரை வடபகுதி மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கின்றேன். சமூக நீதி மற்றும் சமூக வலுவூட்டலை நோக்கிய நமது பயணத்தில் இன்னும் பல வெற்றிகரமான மைல்கற்களின் ஆரம்பமாக இந்தத் திறப்பு விழா அமையட்டும், எனத் தெரிவித்தார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆர்.நிசாந்தன் அவர்களால் இந்த நிலையத்தின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் அதிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

வடக்கு மாகாண சபை, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏசியா பவுண்டேசன் ஆகியவற்றின் வலுவான பங்காண்மையின் அடையாளமாக இந்த நிலையம் திகழ்கிறது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜொகான் ரொபேர்ட், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், உதவிப் பிரதம செயலாளர், சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர், பிரதேச செயலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »