Our Feeds


Thursday, May 21, 2026

Zameera

நூலறுந்த பட்டம் போல உயரும் டொலர்; கோட்டாவின் இருண்ட யுகம் தொடர்கிறது


(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


நூலறுந்த பட்டம் போல டொலரின் பெறுமதி உயர்வடைகிறது. கோட்டாவின்  ஆட்சியின் இருண்ட யுகம் தற்போதும் தொடர்கிறது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்தில் ஆரம்பித்த அபிவிருத்தி கருத்திட்டம் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார  கேள்வியெழுப்பினார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது  நடைபெற்ற  இலங்கை  மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார  மீளாய்வு   அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கிறது.ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அரசாங்கம்  எதனையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின்  ஆட்சியின் இருண்ட காலம் தற்போதும் தொடர்கிறது. அந்த ஆட்சியிலும் டொலர் பெறுமதி உயர்வடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.


அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் நிறைவடைந்துள்ளது.இதுவரையில்  எவ்விதமான பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணயில் எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்க  முடியும். கடந்த கால அரசாங்கங்களின் அபிவிருத்தி கருத்திட்டங்கள் மாத்திரமே திறந்து வைக்கப்படுகின்றன.



பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதத்திலும் நிவாரணமளிக்கவில்லை. நடுத்தர மக்களின் கார் கொள்வனவு கனவு   கேள்விக்குள்ளாகியுள்ளது.


அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் கம்பனிகள்   மேலதிக சுங்க வரி 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர்  3500 இற்கும் அதிகமான கார்களுக்கு கடன்பற்றுப் பத்திரங்களை விநியோகித்துள்ளன. அரசாங்கம் அவர்களுக்கு மாத்திரம் வரி சலுகை வழங்கியுள்ளது.


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.  விவசாயிகளுக்கு போதுமான உரம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு தேசிய பொருளாதாரம் முன்னேற்றமடையும். எதிர்க்கட்சிகளை விமர்சித்துக்  கொண்டிருக்காமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »