Our Feeds


Thursday, May 21, 2026

Zameera

அரசாங்கம் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாங்கள் மக்களின் பக்கம் இருப்போம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது கூறிய எதனையும் இதுவரை செய்யவில்லை. அதனால் வளமான நாடு, அழகான வாழ்க்கை ஊடாக முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாங்கள் மக்களின் பக்கம் இருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற மத்திய வங்கி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 


நாட்டின் பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த தருணத்தில், ஆளும் தரப்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் எனக்கு வியப்பைத் தருகின்றன.மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு  33 வீதம் குறைப்போம் என தெரிவித்து, 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களை அரசாங்கம் ஏமாற்றி இருக்கிறது.. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லும் கமிசன் தொகைகளை நீக்கி, வரிகளை நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்றஹ தெரிவித்தே மக்களின் வாக்குகளை பெற்றது.  இன்று நாட்டின் அனைத்து மக்களும் பொய்யால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.


விவசாயிகளுக்கு இன்று உரம் இல்லை, கிடைக்கும் உரமும் தரமற்றதாகும்.. கடந்த தேர்தல் காலத்தில் நெல் விளைச்சலுக்கு கிலோவுக்கு ரூ.150 உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்திருந்தனர். இன்று விவசாயிகளை ஆதரவற்றவர்களாக்கியது போலவே மீனவர்களையும் தற்சமயம் ஆதரவற்றவர்களாக்கி விட்டுள்ளனர். 


வாழ்க்கைச் செலவு அதிகரித்து வாழ்க்கைச் சுமை அதிகரித்து காணப்படுகிறது. ஓய்வூதியர்களுக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்களின் சேமிப்புகள் மீதான 15வீத வட்டி வருமானங்கள் கூட இன்று பறிக்கப்பட்டுள்ளன. 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள் நாட்டில் மூடப்பட்டு வருகின்றன. இன்று இந்தத் தொழிற்சாலைகள், இந்தியாவிலும் பங்களாதேசத்திலும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. 


எமது நாட்டில் வறுமை 30 முதல் 40வீதம் வரையில் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த வறுமை நிலை தெரிந்தும் அரசாங்கம் வறிய மக்களை புறக்கணித்து வருகின்றது. வறுமை ஒழிப்புக்கு அரசாங்கத்திடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இல்லை. உணவு பாதுகாப்பின்மை, மருந்து தட்டுப்பாடுகள் என்பன நிலவுகின்றன. மருத்துவமனைகளில் உபகரணங்களுக்கு காணப்படும் தட்டுப்பாடுகளால் அறுவைசிகிச்சைகளை செய்துகொள்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது


மேலும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுத் தருவோம் எனக் கூறிய அமைச்சர், கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். கல்விச் சீர்திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கல்வியை ஆபாசமயப்படுத்துவதையே எதிர்த்தோம்.


கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், பாடசாலைகளுக்குத்  தேவையான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களைக் கூட பெற்றுக் கொடுப்பதற்கோ அல்லது தேவையான பயிற்சிகளையேனும் பெற்றுக் கொடுப்பதற்கு கூட முடியாமல் போயுள்ளது. 


12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கி, இந்த அரசாங்கம் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களால் ஆன அரசாங்கம் என்று மக்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று வாகனங்களுக்கு 50வீத வரி விதித்துள்ளனர். 16ஆம் திகதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன்பே இந்த தகவலை அரசாங்கத்திற்கு நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு அனுப்பி 4000 க்கும் அதிகமான வாகனங்களுக்கு வங்கி கடன் கடிதங்களைக் கூட அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பல பில்லியன் நஷ்டம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கீழ்தரமான வேலைகளைச் செய்து சுயநலத்திற்காக நாட்டின் 220 இலட்சம்  மக்களை பலிகொடுத்துள்ளனர். 


மத்திய வங்கி  சுயாதீனம் என்பதால் 25 இலட்சம் அமெரிக்க டொலர் சம்பந்தமான விடயத்திற்கு மத்திய வங்கிக்கு பொறுப்புக் கூறாது மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சே அதற்கான பொறுப்பு கூறவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.மத்திய வங்கி ஆளுநரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என கேட்கிறோம். 


அதனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் முடியுமானால் கிராமங்களுக்கு சென்று, மக்கள் மத்தியில் சென்று, அவர்களின் பிரச்சினைகளை முடியமானால் ஆராயுங்கள். இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை இன்று காணப்படுகிறது. ஆட்சிக்கு வரும்போது கூறிய எதனையும் அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. அதனால் வளமான நாடு, அழகான வாழ்க்கை ஊடாக முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம். அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை மக்களுடன்  நிற்போம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »