Our Feeds


Friday, May 15, 2026

SHAHNI RAMEES

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியில் ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி!

 


குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம்

காணப்பட்டுள்ள பிரதேசத்தில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை வியாழக்கிழமை (14) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது. 


அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமுகமளித்திருந்தனர்.


அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு பல்வேறு தரப்பினர் விஜயம் செய்திருந்தனர். 


இந்நிலையில் சடுதியாக மழை குறிக்கிட்டதன் நிமித்தம் கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. இதனால் மீண்டும் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.



இதன்போது மனிதப் புதைகுழிப் பகுதியில் Magneto tellyurics audio frequency  என்ற ஸ்கேனிங் முறையை பயன்படுத்த மன்று அனுமதி வழங்கி கட்டளையாக்கியிருக்கிறது. 


இந்த அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை  ஆரம்பிக்கின்றனர். 


குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (18) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »