Our Feeds


Tuesday, June 2, 2026

Zameera

நீர் கட்டண திருத்தம்: மீளாய்வு ஜூன் 30 ஆம் திகதி


 நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி மீளாய்வு செய்யப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். 


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிரந்தர சேவையில் இணைந்துகொள்ளும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என கடந்த 19 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 


தற்போதைய நீர் கட்டணங்கள் மூலம் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பதும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. 


நீர் கட்டண திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சாரக் கட்டண உயர்வு நீர் கட்டணத்தில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இருப்பினும் அது மிகக் குறைந்த அளவிலான தாக்கமே எனவும் கூறினார். 


எவ்வாறாயினும், ஜூன் 30 ஆம் திகதி இறுதி மீளாய்வுத் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும், அன்றைய தினம் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் ரணசிங்க, "முதல் 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம். அடுத்த மீளாய்வு ஜூன் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் முதல் ஜூன் 30 வரை நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் வழங்கல் சபையின் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகையை எமது முறையின்படி ஆராய்வோம். அண்மையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டமை நீர் கட்டணத்தில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது மிகக் குறைந்த தாக்கமே. ஜூன் 30 ஆம் திகதி மீளாய்வின் போது நிலைமையை ஆராய்வோம். நீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »