Our Feeds


Monday, June 1, 2026

Zameera

டித்வா புயல் சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை - சமந்த வித்யாரத்ன குற்றச்சாட்டு



டித்வா புயலினால் பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் முறையாகச் செயல்படாததன் காரணமாகவே இதுவரை சீரமைக்க முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். 


சில பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை முறையான மதிப்பீடுகள் கூட செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


டித்வா புயலினால் சேதமடைந்த உமா எல மகா நீர்ப்பாசனக் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார். 


அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, 


மஸ்பன்னே பேருந்து நிலையம் பெரும் அழிவைச் சந்தித்தது என்பதை உலகமே அறியும். பேருந்துகள் அப்படியே மூழ்கின. 'ஏன் மஸ்பன்னே பேருந்து நிலையத்தை இன்னும் சீரமைக்கவில்லை? ஏன் அதற்கான மதிப்பீட்டை சமர்ப்பிக்கவில்லை? என்று நான் அதிகாரிகளிடம் கேட்டேன். 


அனைவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர். இதற்கு யார் பொறுப்பு? இந்தப் பேருந்து நிலையம் யாருக்குச் சொந்தமானது? என்று கேட்டேன். அந்தப் பேருந்து நிலையம் யாருக்குச் சொந்தமானது என்று கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இறுதியாக நானே அதைத் தேடிக் கொடுத்தேன். 


கடந்த 24ஆம் திகதி ஹலாம்பே பாலத்தைப் பார்வையிடச் சென்றேன். டித்வா புயல் மீட்பு திட்டத்தில் அந்த பாலம் சேர்க்கப்படவில்லை. அந்தப் பாலத்தின் அணைக்கட்டு வெடித்துள்ளதோடு, பாலமும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் அங்கிருந்தபடியே தொலைபேசி மூலம் ஏன் இதனைச் சேர்க்கவில்லை? என்று வினவினேன். அதிகாரிகள் அங்குமிங்கும் போன் செய்து கொண்டிருந்தார்களே தவிர, திட்டத்தில் சேர்க்கவில்லை. அந்தப் பாலத்திற்கு ஒரு உரிமையாளரும் இல்லை. இதனை இன்றே சீரமைக்க வேண்டும் என்று நான் கூறினேன். 


இதுபோன்று நீர்ப்பாசனத் துறையிலும் சிறிய விடயங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அவற்றை இப்போதே சேர்த்துக்கொள்ளுமாறு நான் கூறுகிறேன். டித்வா திட்டத்தில் விடுபட்டவை இருந்தால் அவற்றை உடனே சமர்ப்பியுங்கள். ஏனென்றால், நான் முன்பே கூறியது போல 500 பில்லியன் ஒதுக்கப்பட்டதில் 168 பில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 


இந்த பணத்தை இந்த வருடத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது திரும்பச் சென்ற பிறகு மீண்டும் பெறுவது எளிதல்ல. அடுத்த வருடமும் உலகத்திடம் டித்வா என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? எனவே, இவற்றைச் சீரமைக்க வேண்டும். டித்வா ஏற்படுத்திய சவால்களை எதிர்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். 


இதற்காக, அரசியல் அதிகாரத் தரப்பால் செய்யக்கூடியது என்னவென்றால், இவற்றைத் தேடியறிந்து, அதற்கான பணத்தை வழங்கி பணிகளை முன்னெடுப்பதாகும். 


அதிகாரிகளால் செய்யக்கூடியது என்னவென்றால், அதற்கான மதிப்பீடுகளைத் தயாரித்து இந்த வேலைகளைச் செய்வதாகும். பொதுமக்கள் மத்தியிலும் இதற்கு உதவுவதற்கான ஆர்வம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »