(நுவரெலியா நிருபர்)
நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் (வயது 33), அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த உடற்பயிற்சி நிபுணர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நுவரெலியா பொலிஸார், சந்தேக நபர் பற்றிய விபரங்களை தெரிவித்து உதவுமாறு கோரியுள்ளனர்.
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரிலிருந்து நேற்று புதன்கிழமை (17) மாலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண், நுவரெலியாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பல நாட்கள் இரண்டு முறை தங்கியிருந்தமையும் நுவரெலியா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணுடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரே இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அந்த இளம்பெண்ணுடன் விடுதிக்குச் சென்று, புதன்கிழமை (10) விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (16) அந்த பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு சென்றுள்ளார். அதனையடுத்து, நேற்று புதன்கிழமை (17) இரவு 9 மணியளவில், சந்தேக நபர் வாடகைக் காரில் விடுதிக்கு சென்று, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து, அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு சென்று, காரில் ஏற்றிப் புறப்பட்டுள்ளார்.
விடுதியிலிருந்து காரில் புறப்படுவதற்கு முன் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விடுதிப் பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனையடுத்து, விசாரணை நடத்திவரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், உயிரிழந்த பெண், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வந்ததாகவும் அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2023 முதல் மருத்துவமனையில் அந்தப் பெண் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது காதலரான சந்தேக நபர் கன்னொருவவைச் சேர்ந்த 35 வயதான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்து, அவரை விடுதியிலிருந்து வெளியே கொண்டுசென்று, அவரது உடலை ஒரு காரில் ஏற்றி, கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரில் விட்டுச் சென்றதன் பின்னர், இது தொடர்பாக தெல்தெனிய பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
காதலனான சந்தேக நபர் அப்பெண்ணின் முகத்தை மூடியபடி அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
எனினும், அந்தப் பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற சந்தேக நபரை இதுவரை கைது செய்யவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சந்தேக நபரின் புகைப்படங்களை நுவரெலியா பொலிஸார் வெளியிட்டு, சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள், நுவரெலியா பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
071- 8591096 - உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா
071- 8591097 - தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா
