Our Feeds


Friday, June 19, 2026

Zameera

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் - பிரதமர்

 

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும். புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துடன் எமது ஆட்சிக்குள் உருவாக்கப்படும்.


தற்போதைய நிலையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏழ்மை ஒழிப்புக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல திருத்தங்களை உள்ளடக்கி முரண்பாடுகளை கொண்டதாகவே காணப்படுகிறது.புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக தேர்தல் கொள்கை பிரகடனத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம் என்பதை நாங்கள் மறக்கவில்லை.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது பாரியதொரு பொறுப்பாகும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அதற்கு விசேட முன்னுரிமை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.


யாப்புருவாக்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளிகளாக வேண்டும்.


ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.


அதன் பிரதிபலன் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசியலமைப்பினை மக்களின் அங்கிகாரத்துடன் நிச்சயம் உருவாக்குவோம்.


பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது.


அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முற்றாக நீக்கப்படும்.


நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பது புதிய அரசியலமைப்புடன் தொடர்புடையது.


அரசியல் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை சிக்கல்களுக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வளிக்கப்படும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »