Our Feeds


Monday, June 15, 2026

Zameera

யோஷிதவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு


 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், 'சதித்திட்டம்' என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை நாளை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


இதற்கு முன்னர் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கில் தமது கட்சிக்காரருடன் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்மணி பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவர் சட்டமா அதிபரினால் விடுவிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டினார். 


அவ்வாறானதொரு பின்னணியில், தமது கட்சிக்காரருக்கு எதிராக மாத்திரம் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டத்தரணி வாதிட்டிருந்தார். 


எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், ஒரேயொரு பிரதிவாதிக்கு எதிராகவேனும் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார். 


இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் நாளை முழுமையான விசாரணையொன்றை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »