Our Feeds


Monday, June 22, 2026

Admin

குர்ஆன் பிரதிகளை தடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்த மீளாய்வுக்குழு உடன் நீக்கப்பட வேண்டும் - SLTJ பொதுக்குழுவில் அரசுக்கு கோரிக்கை.

 



பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் புத்தக மீளாய்வுக் குழுவை உடனடியாக நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 11வது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


நேற்று 21.06.2026 கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

01. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் சதி அம்பலமும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலானது சில தரப்பினரின் குறுகிய அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி என்பதை இன்று நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டுவது அவசியமாகும். இதற்காக, முறையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, இச்சதியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

02. இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் இன ஒற்றுமை.

இனவாதிகள் மீண்டும் தலைதூக்கி, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தங்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, அண்மையில் ஸஹ்ரானின் பழைய வீடியோ ஒன்றையும் சமூக ஊடகத் தளங்களில் பரப்பி மலிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையாளர்களையும் அவர்களின் சிந்தனைகளையும் முழுமையாகப் புறக்கணித்து, இவ்வாறான இனவாதிகளுக்கு எதிராகச் சட்ட ரீதியாகத் தக்க பதிலடி கொடுத்து, நாட்டில் மீண்டும் இனவாதம் பரவாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.

03. போதைப்பொருள் ஒழிப்புக்கான ஒத்துழைப்பும் பிரச்சாரமும்.

இன்று நாட்டில் போதைப்பொருள் பல வடிவங்களில் ஊடுருவி, இளையசமுதாயத்தைச் சீரழித்து வருகின்றது. அதனை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அனைத்துச் சட்டரீதியான முயற்சிகளுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அதேவேளை, இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பதற்காக, ஜமாத் சார்பாகத் பிரச்சாரப் பணிகளைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

04. மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தலும், புத்தக மறுஆய்வுக் குழுவை நீக்குதலும்.

இலங்கையில் வாழும் அனைத்துக் கொள்கைகளைச் சார்ந்த மக்களுக்கும் தங்களின் மதச் சுதந்திரத்தை எவ்விதத் தடையுமின்றி அனுபவிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதிகளை விடுவிக்காமல் தடை விதித்துள்ள 'மீளாய்வுக் குழுவின்' (Review Committee) செயல்பாடு ஒருதலைப்பட்சமானது என்பது நிரூபணமாகியுள்ளது.

பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் இந்த மறுஆய்வுக் குழுவை உடனடியாக நீக்க வேண்டும் என அரசாங்கத்தை இப்பொதுக்குழு உறுப்பினர்கள் மிக அழுத்தமாகக் கேட்டு கொள்கிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »