Our Feeds


Thursday, July 9, 2026

Zameera

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு


 கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 


அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் இணையவழி மற்றும் கலப்பு முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டார். 


டெங்கு பரவலுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்தார். 


டெங்கு நோய் தொற்றின் போது ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால், இவ்வாறு விரிவுரைகளை இணையவழி ஊடாக நடத்துவதற்குத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைவேந்தர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால், தயவுசெய்து அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கோரியுள்ளார். 


இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு வகையிலும் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்பதை வலியுறுத்திய துணைவேந்தர், அவ்வாறு பல்கலைக்கழகத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »