Our Feeds


Sunday, July 12, 2026

Zameera

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி மூலம்


 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 


அதற்கமைவாக, நாளை (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். 


அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அங்குள்ள சிறைக்கைதிகள் சிலரை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


அவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். 


இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


இதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »