Our Feeds


Tuesday, July 14, 2026

SHAHNI RAMEES

கதவை வெல்டிங் செய்தபோது சிதறிய தீப்பொறியால் அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரையானது!

 

கதவை வெல்டிங் செய்தபோது சிதறிய தீப்பொறியே காரணம்; விமானப்படையினரும் மாநகர சபையினரும் இணைந்து தீயை அணைத்தனர்

அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் திங்கட்கிழமை (13) மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நவகம்புர தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ‘பிரபோத’ நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தொழிற்சாலையின் கதவொன்றை வெல்டிங் (பற்றவைப்பு) செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்து தெறித்து விழுந்த தீப்பொறி அங்கிருந்த தேங்காய் நார் மீது பட்டதால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தேங்காய் நார்கள் மற்றும் உமிகள் மிக வேகமாகத் தீப்பற்றக்கூடியவை என்பதால், தீப்பொறி விழுந்த சில நிமிடங்களிலேயே தீ தொழிற்சாலை முழுவதும் மிக வேகமாகப் பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த பெருமளவிலான தேங்காய் நார்களும், உமிகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், இலங்கை விமானப்படை முகாமின் தீயணைப்புப் பிரிவினரும், அம்பாறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.இலங்கை கலாச்சாரம்


இவ்விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்துச் சேதங்களின் விபரங்கள் இதுவரை முழுமையாக மதிப்பிடப்படவில்லை.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »