Our Feeds


Tuesday, August 11, 2026

SHAHNI RAMEES

உயிர்த் தியாகம் செய்தேனும் 22ஆம் திருத்தத்தை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்! - ஜீ.எல்.பீரிஸ்

 


வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பின்

22ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சட்ட ரீதியில் இந்த திருத்தத்தை தோற்கடிப்பதற்கு உயிர்த் தியாகம் செய்தேனும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளிவந்துள்ளது. ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான சட்டக் கட்டமைப்பிற்குள் இந்தத் திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் உயிர்த்தியாகம் செய்தாவது நிறைவேற்றுவோம். ஏனெனில் இது மிகவும் ஆபத்தான ஒரு திருத்தமாகும். இதன் விளைவுகள் மதிப்பிட முடியாத அளவிற்கு கடுமையானவை.



அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் அனுமதிக்கப்படுவதன் மூலம் இந்நாட்டின் மனித உரிமைகள், எதிர்க்கட்சியின் சட்டபூர்வமான பங்களிப்பை தடைகளின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றல், இறுதியில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடித்தல், பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடித்தல் போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும்  தெளிவானதொரு அபாயம் வெளிப்படுகிறது.


இது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட திருத்தமல்ல; அதற்கும் அப்பால் சென்று இந்நாட்டின் ஜனநாயக கலாசாரம் மற்றும் நாம் அனைவரும் நீண்டகாலமாக பாதுகாத்து வந்த நிறுவனங்களின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் தாக்குதலாகும்.


கடந்த வாரம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாட எம்மால் முடிந்தது. ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர்கள் எமக்கு மிகவும் தெளிவாகத் தெரிவித்தனர். ஆனால், மகாநாயக்க தேரர்களின் கடிதம் கிடைத்ததாகக் கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதற்கு எவ்வித பதிலுமில்லை, முற்றாக அமைதி காக்கப்படுகிறது.


அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எமது மனதில் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. "இதைச் செய்ய வேண்டாம்" என்ற தமது விருப்பமின்மையை மகாநாயக்க தேரர்கள் முன்வைத்தனர் என்பது அக்கலந்துரையாடலில் எமக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது.



இத்தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு இந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏன் இதை மறைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை எங்கே? மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பியிருந்தால், அதன் உள்ளடக்கம் குறித்த தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை? என்ன பிரச்சினை?


அதேபோன்று, இந்நாட்டின் 26,000 சட்டத்தரணிகளை உத்தியோகபூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நீதி அமைச்சரின் ஊடாக சந்தர்ப்பம் கோரியிருந்தது. ஜனாதிபதியை சந்தித்து தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு நேரம் கோரியபோதிலும், இதுவரை அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


அதுமட்டுமன்றி, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவைச் சந்திப்பதற்கும் சட்டத்தரணிகள் சங்கம் நேரம் கோரியிருந்தது. அமைச்சரவையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


அதாவது இவர்கள் உரையாடலுக்கு விருப்பமில்லை. சமூகத்தில் எந்தவொரு கலந்துரையாடலையும் உருவாக்க இவர்கள் விரும்பவில்லை. தமக்குத் தேவையானதை தன்னிச்சையாக, இரகசியமாக, எவ்வித விவாதமுமின்றி அவசர அவசரமாகச் செய்வதே அரசாங்கத்தின் தீவிர தீர்மானமாக உள்ளது. 



அத்துடன் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்படும் காரணங்கள் எவ்வித செல்லுபடியாகும் தன்மையுமற்றவை என்பதை அரசாங்கம் நன்கறியும். அரசாங்கத்தின் பிரதான தர்க்கம் என்ன? ஏன் இதைச் செய்கிறார்கள்? தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்கே இதைச் செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. இக்காரணம் முற்றிலும் பொய். இதன் மூலம் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரணை செய்து எவ்வாறு முடிக்க முடியும்? 


அதுமட்டுமன்றி, வழக்குகள் விசாரணை செய்யப்படும் முறைமை, சிவில் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவுகள் மாற்றப்பட வேண்டும். இன்று உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மட்டுமன்றி ஏனைய நீதிமன்றங்கள் பலவற்றிலும் இடம்பெறும் பல பணிகளை நிர்வாக மட்டத்தில் செய்ய முடியும். நீதிமன்ற நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.


வழக்குகளை விரைவுபடுத்த இப்போதுள்ள நீதிபதிகளுக்கு மேலும் இரண்டு வருடங்களை வழங்குவதால் என்ன பயன்? அந்த நீதிபதிக்கு இரண்டு வருடங்கள் வழங்கப்பட்டால், இப்போது செய்யும் வேலையை விட இரட்டிப்பு வேலை செய்வாரா? இது முற்றிலும் போலியான தர்க்கமாகும்.


வழக்குகளை விரைவுபடுத்துவதாயின் வேறு பல நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும். சட்ட மாஅதிபர் திணைக்களம், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற எதையும் மறுசீரமைக்காமல், அவற்றை அப்படியே வைத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் அதிகரிப்பதால் எந்தப் பயனுமில்லை.



ஆனால் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அதுவல்ல. பிரச்சினை ஒன்று உள்ளது. ஆனால் உள்ள பிரச்சினைக்கும் முன்மொழியப்பட்ட தீர்வுக்கும் இடையே எவ்வித தொடர்புமில்லை. அரசாங்கம் முன்வைப்பது ஒரு போலித் தர்க்கம், எவ்வித நேர்மையுமற்ற தர்க்கம் என்பதை அரசாங்கத்துக்கு நன்றாக தெரியும்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம், அதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவோம். தேர்தல் முறைமை திருப்திகரமாக இல்லை, இதனால் 12 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  இவற்றுக்குத் தீர்வு காண முழுமையான புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக மக்களுக்குத் தெளிவான வாக்குறுதியளித்தனர். அதன்படியே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றனர். இப்போது அதைப் பற்றிப் பேச்சே இல்லை.


இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிச்சயமாக அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்குச் செல்வோம். முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் வாதிடுவோம். பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதல்ல. கட்டாயமாக இது  மக்கள் தீர்ப்புக்காக மக்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.



அத்துடன், உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம். எமது சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் 17 நீதிபதிகள் இருக்கவேண்டும். அதில் 4 வெற்றிடங்கள் உள்ளன. எனவே இன்று 13 நீதிபதிகளே பணியாற்றுகின்றனர். செப்டம்பர் 2ஆம் திகதி மற்றொரு நீதிபதி ஓய்வுபெறவுள்ளார். எஞ்சுவது 12 நீதிபதிகள் மாத்திரமே.


எனவே நாம் உயர்நீதிமன்றம் சென்று, "இதைச் செய்ய முடியாது, மக்கள் தீர்ப்பு கட்டாயமானது" என்ற தர்க்கத்தை முன்வைக்கும்போது, அந்த 12 நீதிபதிகளையும் கொண்ட பூரண நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இத்தர்க்கங்களை முன்வைத்து ஒரு முடிவிற்கு வர வேண்டும் என வேண்டுகிறோம்.


குறிப்பிட்ட சில நீதிபதிகளை மாத்திரம் தெரிவுசெய்து, நாட்டின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும் இந்த பாரதூரமான பணியை ஒரு சிறிய நீதிபதிகள் குழாமிடம் ஒப்படைப்பது எவ்வகையிலும் நியாயமானதாகாது. எனவே பூரண நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்ற தர்க்கத்தை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »