Our Feeds


Saturday, August 15, 2026

Zameera

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு ரூ.570 மில்லியன் மருத்துவ உபகரணங்கள்


 கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர்களின் சிகிச்சை சேவைகளுக்காக இன்று (15) கையளிக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு (ரூ. 200 மில்லியன்), மமோகிராபி பிரிவு (ரூ. 180 மில்லியன்) மற்றும் சி.டி. பரிசோதனைப் பிரிவு (ரூ. 190 மில்லியன்) ஆகியவை இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வைக்கப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் செயற்படுத்தப்படும் சுகாதார முறைமை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சை சேவைகளுக்காக இணைக்கப்பட்ட இரண்டாவது சி.டி. ஸ்கேன் இயந்திரம் இதுவென்பதுடன், இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவும் அவ்வைத்தியசாலைக்கு கிடைத்த இரண்டாவது இருதய வடிகுழாய் ஆய்வகமாகும்.

அத்துடன், இலங்கையிலுள்ள மிக உயர்ந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட 5 மமோகிராபி இயந்திரங்களில் ஒன்றும் இன்றைய தினம் வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.

அதிகளவு காத்திருப்புப் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் தற்போது 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் நிதிப் பங்களிப்பில் புற்றுநோய் பிரிவு, அவசர விபத்துப் பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை அமைப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருதய வடிகுழாய் பிரிவுகள் 16 இந்த ஆண்டிற்குள் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் நிறுவும் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »