Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

முஸ்லிம் விவாகர சட்டத்துக்கு தீர்வு அவசியம் - ஜம்இய்யத்துல் உலமா சபை!



முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜம்மிய்யத்துல் உலமா சபையினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (10) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விடயத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புதிய மறுசீரமைப்புகள் தொடர்பாக ஜம்மிய்யா தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமய விவகாரங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரிடையே பல ஆக்கபூர்வமான கருத்துகள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரம், மூடப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த விவகாரம், சமய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்வது தொடர்பான விவகாரம், கொவிட் 19 காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் விவகாரம் மற்றும் அரச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றுக்கான உரிய தீர்வுகளை பெறுவது குறித்தும் பேசப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஜம்மிய்யாவினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட முக்கிய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி, உப தலைவர் அஷ்ஷைக் உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எஸ்.எம்.தாஸிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எஸ்.எல்.நவ்பர், அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன், அஷ்ஷைக் ஏ.எச்.எம்.அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »