கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம்
: இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபையில் வலியுறுத்தல்நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபையின் 14ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், 13ஆவது மாதாந்த சபைக் கூட்டத்தின் அறிக்கை நிறைவேற்றப்பட்டு, தவிசாளரின் அறிவிப்புகள் மற்றும் பல்வேறு பிரேரணைகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பிலும் சபையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் பாஸ்கரன் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள அரச சேவை விதிமுறைகள், சுற்றுநிருபங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் அமையக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்படும் இந்த சூழலில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஆரோக்கியமானதல்ல எனவும் தவிசாளர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழ்–முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரச நிறுவனங்களில் ஏற்படும் சர்ச்சைகள் அந்த நல்லிணக்கப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என அவர் தெரிவித்தார்.
இதைப்போன்று கருத்து தெரிவித்த உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மற்றும் சபை உறுப்பினர்களான என்.எம். ரணீஸ், ஏ. பர்ஹான், குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் தமது கண்டனத்தையும் அதிருப்தியையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.
அவர்கள் தமது உரைகளில், அரச நிறுவனங்கள் தனிநபர்களின் விருப்பு–வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கக்கூடாது எனவும், அரச சட்டங்கள், சுற்றுநிருபங்கள், சேவை விதிமுறைகள் மற்றும் அரச நியமன நடைமுறைகள் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அத்துடன், அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதுடன், எந்தவொரு நிர்வாகத் தீர்மானமும் சட்ட ரீதியானதும் நியாயமானதுமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைத்து அரச நிறுவனங்களினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர்கள், தமிழ்–முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்த்து, பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வர வேண்டும் எனவும் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ள அந்த வைத்தியசாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கி சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த அரசாங்கத்தையும், உரிய அமைச்சு, திணைக்களம், அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, கூட்டத்தில் சபைக்குச் சொந்தமான JCB வாகனத்தை திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுத் தொகையான ரூ.340,500 செலவில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள சபை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பிரேரணைகளும் ஆராயப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் ஏ. பர்ஹான், பழைய வாகனங்களை தொடர்ந்தும் திருந்திக்கொண்டிராமல் அரசாங்கத்திடமிருந்தும், அமைச்சுக்களிடமிருந்தும் புதிய JCB வாகனத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், சபையின் பதில் செயலாளராக கடமையாற்றும் திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் பதில் செயலாளர் சேவைக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்து பதில் செயலாளராக கடமையாற்றுவதற்கான அனுமதி தொடர்பிலும் சபையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் டெங்கு ஒழிப்பு, வடிகான் துப்பரவு, மாளிகைக்காடு மையவாடி செயற்றிட்டம், சட்டவிரோத வர்த்தக நிலையங்களின் வருகை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் சபை நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் இன்றைய கூட்டத்தில் நிர்வாக ஒழுங்கு, அரச விதிமுறைகளைப் பின்பற்றுதல், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் தமிழ்–முஸ்லிம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
.jpeg)