Our Feeds


Sunday, August 16, 2026

ShortNews

இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!



இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.

'புளோரஸ்' (Flores) தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பிராந்தியத்தில் பெரும் பீதியையும் நிலைகுலைவையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் மிகக் குறைந்த ஆழத்தில் (சுமார் 10 கிலோமீற்றர்) அமைந்திருந்ததால், இதன் தாக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.

இதன் காரணமாகத் தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிகமான அளவில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய இயற்கை அனர்த்தத்தினால் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாகப் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியுள்ளதாலும், சில தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »