Our Feeds


Sunday, August 16, 2026

Zameera

புதிய VAT இன்வொய்ஸ் முறைமை ஒக்டோபர் 01 முதல் அமுல்


 திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது 'வெட்' (VAT) இன்வொய்ஸ் படிவமானது ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


திணைக்களத்தினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 


குறித்த இன்வாய்ஸ் படிவத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வர்த்தக சமூகம் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது அமைப்புகளை (Systems) தயார் செய்து கொள்வதற்காக அவகாசம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


டிஜிட்டல் வரி வசூலிப்பு முறையை சீரமைக்கவும், வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும் கடந்த மார்ச் 27 ஆம் திகதி இந்த புதிய இன்வொய்ஸ் வடிவம் பிரகடனப்படுத்தப்பட்டது.


 


இருப்பினும், இதற்காக நிறுவன மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை (Software Systems) புதுப்பிக்க வேண்டியுள்ளதாக வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


 


அக்கோரிக்கைகளை பரிசீலித்து, ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்கு அமைவாக தங்களது கணக்கியல் மற்றும் பில்லிங் அமைப்புகளை தயாரித்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


 


போலி இன்வாய்ஸ் பயன்பாட்டைத் தடுப்பது, பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண்காணிக்கும் திறன் மற்றும் வரி கசிவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »