இனவாதம் இல்லையா? அப்படியானால் முஸ்லிம்களுக்கு ஏன் இந்த புறக்கணிப்பு?
ராஜபக்ஷ அரசாங்கம் உறுவாக்கிய இனவாதம் அன்று வெளிப்படையாக ஞானசார, அதுரலியே ரதன போன்றவர்களுடன் இன்னும் பலர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக குரல் கொடுத்துவந்தார்கள்....
ஆனால் இன்று நிலைமை வேறுபட்டிருக்கிறது.
இனவாதக் குரல்கள் இல்லாமலிருக்கலாம் ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் ஒன்றன் பின் ஒன்றாக பறிக்கப்படுகின்றன என்ற உணர்வு இன்று உருவாகியுள்ளது.
தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்து வந்த அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. நீதித்துறையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அண்மைய தொகுதி நிர்ணயக் குழுவிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தும் வெறும் தற்செயல்களா?
அல்லது முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக ஓரங்கட்டும் ஒரு புதிய அணுகுமுறையா?
அரசாங்கம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரத்தில் அரசாங்கம் கையாண்ட விதமும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியது.
அந்த நேரத்திலேயே ஜனாதிபதியிடமிருந்து ஒரு தெளிவான தலையீட்டையும் தீர்வையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
குறைந்தபட்சம் தேசிய மீலாத் தின நிகழ்விலாவது, முஸ்லிம் சமூகத்தின் இந்தக் கவலைகளுக்கு ஒரு தீர்வாக ஜனாதிபதி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் என்ன நடந்தது?
“இந்த நாட்டில் இனவாதத்திற்கு இனி இடமில்லை” என்ற பொதுவான வார்த்தைகள் மட்டுமே.
இனவாதம் இல்லை என்று மேடையில் உரத்துக் கூறுவதில் மட்டும் போதாது. அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் அது தென்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக யாரும் வெளிப்படையாக பேசவில்லை என்பதற்காக எல்லாம் சரியாகிவிட்டது என்று அர்த்தமல்ல.
உரிமைகள் புறக்கணிக்கப்படும்போது, பிரதிநிதித்துவம் மறுக்கப்படும்போது, நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும்போது அது எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், அதன் தாக்கத்தை அனுபவிப்பது முஸ்லிம் சமூகமே.
முஸ்லிம்களுக்கு அரசாங்கத்திடம் வேண்டியது எந்தவொரு விசேட சலுகையும் அல்ல.
சம உரிமை.
சம பிரதிநிதித்துவம்.
சமமான நீதி.
சமமான மரியாதை.
அரசாங்கம் உண்மையில் இனவாதத்திற்கு எதிரானது என்றால், அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
இல்லையென்றால், "இனவாதம் இல்லை" என்ற அரசாங்கத்தின் வார்த்தைகளுக்கும், முஸ்லிம் சமூகத்தின் அனுபவத்திற்கும் இடையிலான முரண்பாடு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும்.
ஹிதாயத் சத்தார்
மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்
