Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் - தேசபக்தி தேசிய இயக்கம்


தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் அப்பட்டமான பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வியக்கம், இத்தகைய பின்னணியைக் கொண்ட அசாத் மௌலானாவின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசபக்தி தேசிய இயக்கத்தின் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான சஞ்சீவ வீரவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஏதேனும் ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் அவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'சிறிசேன குரே எதிர் சட்டமா அதிபர்' வழக்குத் தீர்ப்புக்கு அமைய, ஒருவரைக் கைது செய்வதற்கு முன்னர் அதற்கான தகுந்த காரணங்களும் சான்றுகளும் அதிகாரிகளின் வசம் இருக்க வேண்டும்.

ஆனால், ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகளிடம் அத்தகைய சான்றுகள் எதுவும் இருக்கவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையோ அல்லது நீதவானின் பிடியாணயோ இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது முழுமையாக ஒரு தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய திருத்தங்களின்படி, நபரொருவர் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் அது குறித்து நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதனைச் செய்யாமல் மறைத்ததுடன், எமது சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்துக்குச் சென்று வினவிய பின்னரே அவரைத் தடுத்து வைத்துள்ளதை ஒப்புக்கொண்டனர். பிரான்ஸில் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் டீ811ஃ23 என்ற வழக்கின் கீழ் திறந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், ஷானி அபேசேகர அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாகச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.

மேலும், சுரேஷ் சலே தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள இடைமனுவில் அப்பட்டமான பொய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2012 முதல் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடக்கும் வரை சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளராகப் பணியாற்றினார் என கர்தினால் ஆண்டகை தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மை நிலைமை என்னவெனில், சுரேஷ் சலே 2006 முதல் 2009 வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு நடவடிக்கைகளை முறியடிக்கும் சிறப்புப் பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் 2012 முதல் 2015 வரை இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த அவர், 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும், இந்திய இராணுவக் கல்லூரியிலுமே கடமையாற்றினார். அக்காலப்பகுதியில் அவர் இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை.

இவ்வாறான அநீதியான முறையில், பொய்களை அடிப்படையாகக் கொண்டு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்காமல் உடனடியாக அவரை விடுவிக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »