Our Feeds


Sunday, August 16, 2026

SHAHNI RAMEES

கல்முனை வைத்தியசாலை ஹிஜாப் சரச்சை! - அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது.

 


கேள்வி: கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும் பல மதங்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில், நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும்.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல. அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும் முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

இங்கு இன்னுமொரு விடயத்தை நினைவுபடுத்த வேண்டும்.

2004ஆம் ஆண்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த காலத்தில், முஸ்லிம் மாணவிகளின் மத மற்றும் கலாசார தேவைகளை கருத்திற்கொண்டு மேலதிக பாடசாலை சீருடைத் துணி வழங்கும் ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த விஜித ஹேரத் அவர்களும் இத்தகைய முற்போக்கான அணுகுமுறைக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றினார்.

எனவே, மத மற்றும் கலாசார உரிமைகளை மதிப்பது இன்று புதிதாக நாம் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு அல்ல. அது மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால முற்போக்கான அரசியல் அணுகுமுறையின் தொடர்ச்சியாகும்.

ஒரு நடவடிக்கைக்கு சட்ட ரீதியான நியாயம் இருக்கலாம். ஆனால் அது சமூக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

இன்று அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்கள் மத்தியில் வலுவான நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றிருக்கும் நிலையில், இந்தச் சூழ்நிலையை சிலர் தேவையற்ற விதத்தில் பெரிதுபடுத்தி, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேடுவதற்காக பயன்படுத்த முயற்சிப்பதையும் நாம் காண்கிறோம். அவர்களின் உள்நோக்கம் குறித்தும் இயல்பாகவே கேள்விகள் எழுகின்றன.

ஒரு நிர்வாகப் பிரச்சினையை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது.

இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் இந்த அரசாங்கத்தில் எந்தவித இடமும் இல்லை என்பதே எங்களது உறுதியான கொள்கையாகும்.

இந்த விடயத்தில் நாம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துள்ளோம். அனைத்து தரப்பினரின் உரிமைகளையும், தொழில்சார் தேவைகளையும், தனிநபர் மரியாதையையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வை ஏற்படுத்த தேவையான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்.

-அருண் ஹேமச்சந்திரா-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »