Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் எம்.பி!


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (10) விஜயம் மேற்கொண்டார்.

கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட திம்புல்ல கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் டி.பி டிவிசன் மற்றும் லொக்கில் டிவிசன் உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளிட்ட மக்களின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மண்டபங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான், அவர்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார்.

வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு ஏற்படக்கூடிய அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பான இடவசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை கொண்டு சென்று, உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாள் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ப தொழில் அழுத்தங்களும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து தொடர வேண்டிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் தோளோடு தோள் நின்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி. சக்திவேல், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா. காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »