Our Feeds


Friday, August 21, 2026

ShortNews

சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் ஹம்தி உயிரிழந்த சம்பவம் - முஜுபுர் ரஹுமான் கேள்வி!


2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டென்ட் (Stent) மாற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஸ்டென்ட்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையுடன் தொடர்புடைய மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலர், சம்பவத்திற்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அதன் அறிக்கை இதுவரை பெற்றோரிடம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கை மருத்துவர் ரத்னபத்துவிடம் இருப்பதாகக்கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த அறிக்கை பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இதுவரை மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய தரப்பினரிடம் இது குறித்து வினவப்பட்ட போதிலும், விசாரணையின் முடிவுகள் அல்லது உரிய பதில்கள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை, அறிக்கை பெற்றோரிடம் வழங்கப்படாததற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரிய விளக்கமும் நடவடிக்கையும் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »