Our Feeds


Thursday, August 6, 2026

ShortNews

SLS தரமற்ற தலைக்கவசங்கள் விற்றவர்களுக்கு அபராதம்!


மஹர பகுதியில் SLS தரச்சான்றிதழ் இல்லாத பாதுகாப்பு தலைக்கவசங்களை விற்பனை செய்த கடை மற்றும் அவற்றை விநியோகித்த நிறுவனத்திற்கு தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 ரூபாய் அபராதம் விதித்து, கைப்பற்றப்பட்ட 42 தரமற்ற தலைக்கவசங்களையும் அழிக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், கடந்த ஜூலை 28ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் (SLS 517) தரச்சான்றிதழ் முத்திரையற்ற 42 பாதுகாப்பு தலைக்கவசங்களை கைப்பற்றினர்.

இதையடுத்து, வலிவேரிய பகுதியில் உள்ள விற்பனை நிலையம் மற்றும் மாக்கொள பகுதியில் உள்ள விநியோக நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளை மீறியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது இரு பிரதிவாதிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட 42 தரமற்ற தலைக்கவசங்களையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் SLS தரச்சான்று இல்லாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் அல்லது விநியோகிக்கும் வர்த்தகர்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »