கொழும்பு ஹெவ்லொக் டவுன் பகுதியில் அமைந்திருந்த, 1 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியமொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, புற்றுநோய் மற்றும் இருதய நோய்களுக்கான மருந்துகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த நிறுவனம் சட்டபூர்வ இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி, பயணிகளின் பயணப்பொதிகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மருந்துகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் சந்தை பெறுமதி 1 கோடி ரூபாவை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பதிவு செய்யப்படாத அல்லது தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Thursday, August 6, 2026
கொழும்பில் சட்டவிரோத மருந்துக் களஞ்சியம் முற்றுகை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
