இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சேவைத்துறையின் மந்தமான வளர்ச்சியை ஈடுசெய்யும் வகையில், தொழிற்துறை நடவடிக்கைகள் திறம்படச் செயற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.91 டிரில்லியன் ரூபாவாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.03 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.3 சதவீதம் அதிகரித்து 8.25 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறை 25.9 சதவீதம், விவசாயம் 8.4 சதவீதம், பொருட்களின் மீதான வரிகள் நீங்கலாக மானியங்கள் 13.0 சதவீதம், சேவைகள் 52.7 சதவீதம் என்ற அடிப்படையில் பங்களிப்பு செலுத்தியுள்ளன.
(இராஜதுரை ஹஷான்)