(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதி சேவை ஆணைக்குழு திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எவரானாலும் அவர்கள் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று மனு தாக்க செய்ய முடியும்.
அவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்கமைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, எந்தளவு பெரும்பான்மை வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அந்த வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதா அல்லது அதற்கும் மேல் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டுமா என்பதை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது.
நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். 22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்திருப்பவர்களும் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்த தீர்மானம் 21ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எனவே பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.