(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதத்தில் இருந்து எரிபொருளுக்கு நிவாரண தொகை ஒதுக்க போவதில்லை என்று அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் மரிக்கார் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என வலுசக்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இந்த மாதத்தில் இருந்து எரிபொருள் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க போவதில்லை என்று அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு எழுந்து பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, பொய்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை.செப்டெம்பர் மாதம் முதல் எரிபொருள் நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவிக்கவில்லை. பொய்யுரைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியின் உறுப்பினரிடம் குறிப்பிடுகிறேன்.
குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது அதற்கான ஆதாரங்களையும் சபைக்கு முன்வைக்க வேண்டும். எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை திருத்தத்தின்போது நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.