(நா.தனுஜா)
சுயாதீன நீதித்துறையானது நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்கவேண்டும். அதற்கமைய ஊழலுக்கு எதிரான போராட்டம் கூட அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தின் 17ஆவது வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 4(இ) இற்கு முரணானதாகக் காணப்படுவதாகவும், எனவே இந்த ஏற்பாட்டை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பின்றி சட்டமாக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்றுக் கருத்து வெளியிட்டுள்ள அலி சப்ரி மேலும் கூறியிருப்பதாவது:
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது நீதித்துறையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்கான உரிமமாக ஒருபோதும் மாறக்கூடாது.
பிணை வழங்குதல் தொடர்பில் நீதித்துறை கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை மட்டுப்படுத்தும் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தின் 17 ஆவது வாசகத்தை அதன் தற்போதைய வடிவத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பின் மூலமான மக்கள் அங்கீகாரம் என்பன இன்றி சட்டமாக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இங்கு கோட்பாடு தான் அடிப்படையானது. மக்களின் நீதித்துறை அதிகாரம் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய தீர்மானங்கள் தொடர்பில் சுயாதீன நீதிமன்றத் தீர்ப்பு இன்றியமையாததாகும். அந்த இடத்தை நிறைவேற்றதிகாரத்தினால் கைப்பற்றிக்கொள்ளமுடியாது.
நீதியரசர்களான ஏ.எல்.ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் எம்.சம்பத் கே.பி.விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு மிகமுக்கியமான இந்த அரசியலமைப்புசார் பாதுகாப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.
சுயாதீன நீதித்துறையானது நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்கவேண்டும். அதற்கமைய ஊழலுக்கு எதிரான போராட்டம் கூட அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.