Our Feeds


Monday, September 21, 2026

Zameera

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு

 


தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 


2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், அவர் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 


அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று, அதாவது 42.31% வாக்குச் சதவீதத்தைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றார். 


முதல் விருப்பவாக்கில் எந்தவொரு வேட்பாளரும் 50% க்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெறாததால், இரண்டாம் விருப்பவாக்குகளை எண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது. 


இரண்டாம் விருப்பவாக்குகள் கூட்டப்பட்ட பின்னர், அநுர குமார திசாநாயக்க மொத்தம் 5,740,179 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 


அநுர குமார திசாநாயக்க தென், மேல், வடமேல், வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் அதிக பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டதுடன், சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றார். 


வெற்றியின் பின்னர் 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதுடன், பின்னர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமராக நியமித்து செப்டெம்பர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற முடிந்தது. 


இதன்போது தேசிய மக்கள் சக்தி மொத்தம் 6,863,186 வாக்குகளைப் பெற்று 159 பாராளுமன்ற ஆசனங்களை, அதாவது தேர்தல் தொகுதிகள் மூலம் 141 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் வென்றெடுத்தது. 


இது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் கட்சியொன்று பெற்ற மிகப்பெரிய பெரும்பான்மை ஆசன எண்ணிக்கையும் அதிக வாக்குச் சதவீதமும் ஆகும். 


இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியதுடன், இலங்கைத் தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் பெற்றன. 


இதற்கிடையில், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு "ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் இந்த மக்கள் பேரணித் தொடரின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்த வெற்றிகள், நடைமுறைப்படுத்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


எவ்வாறாயினும், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசாங்கம் பல விமர்சனங்கள் மற்றும் பலமான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »