(நமது நிருபர்)
இலங்கையில் எற்படும் வீதி விபத்துக்களில் ஏறத்தாழ 30 வீதமானவை தெருநாய்களினால் இடம்பெறுகின்றன அத்தோடு நாய் கடிக்கான மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்காக வருடந்தோறும் சுமார் 1 பில்லியன் ரூபா வரையிலாக செலவிடப்படுகின்றது என விலங்குத் தொகையை மனிதாபிமான முறையில் நிர்வகிப்பதற்கான கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதிகரித்து வருகின்ற தெருநாய்களின் எண்ணிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றது. மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் சமூகத்தின் மீதான அக்கறை பற்றிய புரிந்துணர்வு இன்மையுமே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு முக்கிய காரணிகளாகும். குறிப்பாக குப்பை உள்ளிட்ட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அவற்றை தான்தோன்றித்தனமாக இட்டுச்செல்வதினாலே தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுக்கின்றது.
இதனால் விலங்குத் தொகையை நிர்வகிப்பதற்கான புதிய சட்டத்திட்டம் இத்தகைய தெருநாய்கள் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வினைப் பெற்றுத்தரும்.
அந்த புதிய சட்டத்திட்டத்தின் பிரகாரம் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களினை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனத்தில் பதிவு செய்தல் அவசியமாகும். மேலும் உரிமையாளரும் பராமரிப்பாளரும் இல்லாத நாய்கள் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தில் ஒப்படைக்கப்படும்.
இதனூடாக நாய்களுக்கு தடுப்பூசிப் போடுவதும் கருத்தடை செய்வதனையும் அரசாங்கம் பொறுப்பேற்கும். ஆக வீதிகளில் பராமரிப்பின்றி நாய்கள் கைவிடப்படாது.
உரிமையாளரும் பராமரிப்பாளரும் இல்லாத தெருநாய்களை உரிய உள்ளூராட்சி நிறுவனமானது பொறுப்பேற்கும் என முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்திட்டத்தின் ஊடாக நாட்டின் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு சிறந்த மற்றும் நீண்டகால தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையினைப் பொறுத்தமட்டில் வீதி விபத்துக்களில் 30 வீதமானவை தெருநாய்களினால் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி நாய்க்கடி தடுப்பூசிக்காக வருடந்தோறும் சுமார் 1 பில்லியன் ரூபா அளவில் செலவிடப்படுகின்றன. இது மக்களின் வரிப்பணம் ஆகும். ஆகவே நாம் அனைவரும் இந்தப் பிரச்சினைத் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இந்த விலங்குகள் விருப்பத்தின் பெயரில் வீதிக்கு வருவதில்லை. மக்களின் பொறுப்பட்ட மற்றும் புரிதலற்ற செயற்பாடுகளே தெருநாய்கள் வீதியில் இருப்பதற்கு முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.