Our Feeds


Tuesday, September 15, 2026

Zameera

மாகாணசபைத் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார

 


(இராஜதுரை ஹஷான்)


மாகாணசபைத் தேர்தலை எந்த வழியில் பிற்போடலாம் என்பதற்காகவே அரசாங்கம் பாராளுமன்ற விசேட செயற்குழுவை பயன்படுத்துகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கலுக்கு உடன் தீர்வு காணலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலவகாசம் நீட்டிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குழு கூட்டத்தை புறக்கணித்தமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கும் பாராளுமன்ற விசேட குழு கூட்டம் கடந்த 08 மாத காலமாக கூடியது.



மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. பழைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.


தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.தேர்தலை பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே முன்னுரிமையளிக்கப்பட்டது.


இதற்கமைய இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது முறையற்றது. தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. குழு அறிக்கை சமர்ப்பித்தால்  தேர்தலை நடத்த தயார் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்புச் செய்கிறது.


காலத்தை வீணடிக்கும் இந்த செயற்குழுவில் தொடர்ந்து பங்குப்பற்றுவது பயனற்றது. ஆகவே எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும் இனி குழுவில் கலந்துக் கொள்ள போவதில்லை என்று தீர்மானித்துள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »