Our Feeds


Tuesday, September 15, 2026

Zameera

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கக்கூடாது - வசந்த முதலிகே

 

(க.சிவலிங்கமூர்த்தி)


இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தின் கீழ் கைரேகை, கருவிழி உள்ளிட்ட உயிரியளவியல் தரவுகளை சேகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாம் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களின் மிகவும் உணர்வுபூர்வமான உயிரியளவியல் தரவுகளை அரசாங்கம் சேகரித்து வைத்திருப்பதற்கும், அவை இந்திய நிறுவனங்களின் தலையீட்டிற்கு உட்படுத்தப்படுவதற்குமே எமது எதிர்ப்பு.


ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கும் கைரேகை, கருவிழி, முக அடையாளம் போன்ற தனித்துவமான உயிரியளவியல் தரவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறான தரவுகள் எதிர்காலத்தில் மக்களை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும் முடியும்.


இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் இருக்கின்ற நிலையில், இத்திட்டத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய நிறுவனங்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? மேலும், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை அரசாங்கம் ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை?


ஆட்பதிவு திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தப் பொறுப்பு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை எந்தவொரு இந்திய நிறுவனத்திற்கும் வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது.


எனவே, உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேவேளை, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே செவ்வாய்கிழமை (15) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்பாக மக்கள் போராட்ட முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என வசந்த முதலிகே மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »