(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் முறைமைகள் (மாகாணசபை நீங்கலாக) குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு காலத்தை வீணடிக்கும் வகையில் தான் செயற்படுகிறது. இதுவரையில் முன்னேற்றகரமான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. பழைய முறைமைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் முறைமை (மாகாணசபை நீங்கலாக) குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தல் முறைமை,பாராளுமன்றத் தேர்தல் முறைமை மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஆகிய தேர்தல் முறைமைகளில் காணப்படும் குறைபாடுகள் காலம் காலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இருப்பினும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நடைமுறையில் காணப்படும் குறைப்பாடுகளை திருத்திக்கொண்டு புதிய அம்சங்களுடன் தேர்தல் முறைமையை அமுல்படுத்த வேண்டும் என நான் முன்வைத்த யோசனைக்கு அமைய மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த செயற்குழுவின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்படுகிறது.குழு நியமிக்கப்பட்டு 03 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் முன்னேற்றகரமாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இதுவரையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
தேர்தல் முறைமையில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு காணவும், மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பழைய முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் உள்ளது என்றார்.