Our Feeds


Thursday, October 1, 2026

Zameera

ராஜபக்‌ஷர்களுடன் இருப்பது பாதாள உலகக் குழுவுடன் இருப்பதற்கு சமம் – சமீர் பெரேரா

 


(க.சிவலிங்கமூர்த்தி)



ராஜபக்‌ஷ குடும்பத்துடன் இருப்பது பாதாள உலக் குழுவுடன் இருப்பதற்கு சமமானது எனவும், அவர்களுடன் நெருக்கமாக செயற்படுபவர்கள் தங்களது அரசியல் அடையாளத்தை இழந்து அவர்களின் ஆதரவாளர்களாக மாறிவிடுவதாகவும் இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர் பெரேரா சுட்டிக்காட்டினார்.


கொழும்பில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


கடந்த சில நாட்களாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் அந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் நாம் பார்த்தோம். எனவே, தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் தொடர்பில் முழுமையான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.


ஷங்ரி-லா விடுதி குண்டுதாரியின் மாமனார் எனக் கூறப்படும் அலாவுதீன் தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது மகள் தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


அலாவுதீன் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவராகவும், அவருக்காக நேரடியாக நிதி செலவிட்டவராகவும் கூறப்படுகிறது. முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இந்த விடயங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ராஜபக்ஷகளுடன் இருப்பது பாதாள உலகத்துடன் இருப்பதற்கு சமம் என்று கூறுவதற்கு காரணம், அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் தங்களது சொந்த அரசியலை இழந்து அவர்களின் அடிவருடிகளாக மாறியுள்ளமையாகும். ராஜபக்‌ஷ குடும்பத்துடன் இருந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக் கூற முடியாது. ஆனால், ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் எந்த அரசியல் குடும்பத்துடன் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.


அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் தங்களையும் சிறையில் அடைக்க முடியும் எனக் கூறியுள்ளனர். ஒருவர் செய்த செயல் அவரைப் பின்தொடரும் என்பதே பௌத்த போதனையாகும். குற்றம் செய்திருந்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.


இதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சிலர் முன்வைக்கும் காரணங்களும் கவனத்துக்குரியவை. அதனை எதிர்ப்பதன் மூலம் வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பு உருவாகக்கூடாது. கடந்த காலங்களில் சிலர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக வைத்தியசாலைகளில் தங்கியிருந்த சம்பவங்களை மக்கள் பார்த்துள்ளனர்.



18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்று 22ஆவது திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். அரசியல் அதிகாரத்தை ஒரு குடும்பத்தைச் சுற்றி குவிக்கும் அரசியல் கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் நீதித்துறை சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுவதற்கு அரசியலமைப்பு மறுசீரமைப்பு அவசியமாகும். ராஜபக்‌ஷ குடும்பத்துடன் நெருக்கமாக இருந்ததற்காக எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை உருவாக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் தங்களது செயல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.


மேலும், ராஜபக்‌ஷ குடும்பத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கலாகக் கருதப்படாமல், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமெனில், தாக்குதலின் திட்டமிடல், அதற்கான ஆதரவு மற்றும் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் அனைத்தும் வெளிப்படையாக ஆராயப்பட வேண்டும்.


எந்தவொரு அரசியல் செல்வாக்கும் விசாரணைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது. அத்துடன், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசியல் செல்வாக்கு அல்லது அதிகாரத் தொடர்பு காரணமாக எவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »