(இராஜதுரை ஹஷான்)
நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து, தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு பெறவே எதிர்க்கட்சியின் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஊழல்வாதிகள் சிறைசெல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினையல்ல என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் புதன்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நீதிமன்ற சுயாதீனம் பற்றி தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பதையே தற்போதைய பிரதான கொள்கையாக கொண்டுள்ளார்கள்.ஏதேனும் வழக்கில் தமக்கு சாதகமான வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நீதிமன்றம் சுயாதீனம் என்று குறிப்பிடுகிறார்கள், எதிராக தீர்ப்பளித்தால், நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள்.
நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து, தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு பெறவே எதிர்க்கட்சியின் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஊழல்வாதிகள் சிறைசெல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினையல்ல.
நீதித்துறை சுயாதீனமாகவே செயற்படுகிறது. கடந்த காலங்களில் அரசியல் ஆதரவுடன் கிடப்பில் போடப்பட்ட சர்ச்சைக்குரிய பல வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விசாரணை பிரிவுகளுக்கு தேவையான ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒன்றும் அரசியல் தலையீடு அல்ல,
2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பயனுடையதாகவே அமையும்.வளமான நாடு- அழகான வாழ்க்கை கொள்கைத்திட்டத்தில் வழங்கிய வாக்குறுதிகளை பதவிக்காலத்துக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளியக தாக்கங்களினால் தோற்றம் பெற்ற பாதிப்புக்களை மக்கள் அறிவார்கள். எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்கள் நடைமுறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்றார்.