கடந்த சனிக்கிழமை (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் வெற்றிகரமாக மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் ஏற்பட்ட திடீர் மின் கட்டமைப்பு முடக்கம் காரணமாக இந்த மூன்று மின் உற்பத்தி அலகுகளும் உடனடியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.
அவசர மின் முடக்கத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் சில நாட்களுக்கு தேசிய மின் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு காணப்படும் என்று தேசிய அமைப்பு நடத்துநர் நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இத்தகைய அவசர நிலைகளின்போது பின்பற்றப்படும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தனது அறிக்கையின் ஊடாக விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், தேவையான பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு மூன்று மின் உற்பத்தி அலகுகளையும் மீண்டும் இயக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
