Our Feeds


Friday, October 30, 2026

Zameera

புதிய சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்கக்கூடும் – புபுது ஜயகொட குற்றச்சாட்டு

 

(க.சிவலிங்கமூர்த்தி)


பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலமும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டினார்.


நுகேகொடையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (28)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள இரண்டு சட்டமூலங்களும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பொலிஸாருக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன. ஏற்கெனவே நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் இருந்த விடயங்களையும் நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைக்கும் வகையிலான ஏற்பாடுகள் இதில் காணப்படுகின்றன.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தில் குற்றங்கள் தொடர்பான வரைவிலக்கணம் மிகவும் விரிவாக உள்ளது. நான்கு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், திருட்டு, அறிவுசார் சொத்துரிமை மீறல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட குற்றங்களும் இதன் கீழ் உள்ளடக்கப்படக்கூடும்.


மேலும், ஒருவரின் ஆடை, சைகைகள், மொழிப் பயன்பாடு அல்லது பச்சை குத்திய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கக்கூடிய நிலை ஏற்படலாம். இதனால், இளைஞர்கள் உள்ளிட்ட சாதாரண மக்கள் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம்.


இந்தச் சட்டமூலத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் வரை பொலிஸ் காவலில் வைத்திருக்கவும், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் ஊடாக இரண்டு மாத காலப்பகுதிகளாகத் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பித்து அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தடுத்து வைக்கவும் ஏற்பாடுகள் உள்ளன. அத்துடன், பிணை வழங்குவதற்கான நீதவானின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல், நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தி வைத்திருத்தல் மற்றும் பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களைச் சான்றாகப் பயன்படுத்துதல் போன்ற ஏற்பாடுகளும் கவலைக்குரியவை.


இந்தச் சட்டமூலங்களின் பெயர்களைப் பார்த்து அவற்றை மதிப்பிடக்கூடாது. அவற்றின் உண்மையான நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் ஆராய வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறினாலும், எதிர்காலத்தில் வேறு ஆட்சியாளர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் பெயரில் மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடாது. தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் போராட்டங்களும் கருத்து வெளிப்பாடுகளும் இத்தகைய சட்டங்களால் பாதிக்கப்படக்கூடும்.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் இந்தச் சட்டமூலங்களின் ஏற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசின் அடக்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்த இரண்டு சட்டமூலங்களையும் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என அரசாங்கத்தைக் கோருகின்றோம். அவை கொண்டுவரப்பட்டால் அவற்றைத் தோற்கடிப்பதற்காகப் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுவோம். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »