Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

காவந்திஸ்ஸ' யானை உயிரிழப்பு தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழு நியமனம்

 

கல்கமுவ - சியம்பலன்கமுவ பகுதியில் 'காவந்திஸ்ஸ'  யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், வனப்பகுதிகளிலுள்ள யானைகளின் நலன்புரி தொடர்பில் நிலையான வழிகாட்டல் நடைமுறையொன்றை தயாரிப்பதற்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது


கடந்த 2026 ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலன்கமுவ பகுதியில் 'காவந்திஸ்ஸ' என்ற யானை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டமொன்றிற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அமைச்சின் முன்னாள் செயலாளரான ஏ.எச். சரத் விஜேசிங்கவின் தலைமையில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ரீ. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அணில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காளிங்க பத்மலால், கலாநிதி ஜெகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் பணியாற்றவுள்ளனர். அத்துடன், இந்த விசேட நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டபிள்யூ.டபிள்யூ. ஹரிசன் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


'காவந்திஸ்ஸ'  யானை உயிரிழந்த விதம், அதற்கு வழிவகுத்த உடனடி மற்றும் மறைமுகக் காரணங்கள், சிகிச்சைகளின் போது ஏதேனும் தவறுதல்கள் அல்லது அலட்சியப் போக்குகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்துக் கண்டறிவது இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.


மேலும், வனப்பகுதிகளிலுள்ள யானைகளின் நலன்புரி தொடர்பில் நிலையான வழிகாட்டல் நடைமுறையை தயாரிப்பதும், நாட்டிலுள்ள யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இப்பணிகளை முன்னெடுக்கும் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்வதற்கு இந்த விசேட குழுவிற்கு அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது.


காவந்திஸ்ஸ யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை, முன்மொழியப்பட்டுள்ள வனப்பகுதியிலுள்ள யானைகளின் நலன்புரிக்கான நிலையான வழிகாட்டல் நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்திற்கான முன்மொழிவுகள் அடங்கிய முழுமையான அறிக்கையை 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »