( எம்,ஆர்,எம்,வசீம், இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கும், நிதி நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குமான சாத்தியக்கூறு குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை அனுமதியுடன் துறைசார் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் இலங்கை வங்கியிடம் 118 மில்லியன் டொலர், மக்கள் வங்கியிடம் 138 மில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது. இந்த கடன் தொகையை ஐந்தாண்டுக்குள் தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு குறித்த கடன் தொகை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2025 செப்டெம்பர் மற்றும் 2026 ஏப்ரல் மாதம் இரு தவணை தொகை செலுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கடன் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கும், நிதி நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை அனுமதியுடன் துறைசார் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.
நாட்டில் வரிச் செலுத்தும் மக்களுக்கு சுமையாக அமையாத வகையில் இந்த நிறுவனத்தை பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தை தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.
