Our Feeds


Wednesday, November 18, 2026

Zameera

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை!

 

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 



இன்று புதன்கிழமை (18) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்ட காற்றின் தரக் குறியீட்டு அளவீடுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக யாழ்ப்பாணத்தில் 186 என்ற காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. 


அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் 170, பத்தரமுல்லையில் 166, அநுராதபுரத்தில் 165 மற்றும் சிலாபத்தில் 164 என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.


மேலும், திருகோணமலையில் 156 ஆகவும், அக்கரைப்பற்றில் 154 ஆகவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. 


இந்த அனைத்துப் பகுதிகளும் 'ஆரோக்கியமற்ற' பிரிவின் கீழ் வருவதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, எல்ல பகுதியில் 101 என்ற அளவீடு பதிவாகியுள்ள நிலையில், அது 'சற்று ஆரோக்கியமற்ற'  பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் 96 ஆகப் பதிவாகியுள்ளதால், அங்கு காற்றின் தரம் 'மிதமான' நிலையில் உள்ளது.



மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஆறு முக்கிய மாசுபடுத்திகளின் செறிவை அடிப்படையாகக் கொண்டே காற்றின் தரம் மதிப்பிடப்படுகிறது.


காற்றின் தரக் குறியீட்டைக் கண்காணிப்பதன் மூலம் சாத்தியமான சுகாதார அபாயங்களைக் கண்டறியவும், சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியும்.


எனவே, பொதுமக்கள் குறிப்பாக அதிக மாசு அளவு பதிவாகியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »