பாராளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை நுழைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார
(செ.கவிஷனா)
வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் நுழைவாயில்களைத் திட்டமிட்டுத் திறந்துவிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளே நுழையச் செய்து குழப்பங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த முயன்றது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இத்தகைய சதி முயற்சிகளுக்கு மத்தியில், தங்களது தரப்பினர் எத்தகைய வன்முறைகளிலோ அல்லது பாராளுமன்றத்திற்குத் தீ வைப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களிலோ ஈடுபடவில்லை. மாறாக, தாங்கள் எப்போதுமே விதிகளுக்குட்பட்ட, அமைதியான மற்றும் ஒழுக்கமானவர்கள் என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள சூழலில், பொதுமக்கள் தங்களது உரிமைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் செல்லக்கூடிய ஒரே இடமாக நீதித்துறை மாத்திரமே எஞ்சியிருந்தது. இந்நிலையில், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யும் உரிமைகளுக்கும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் இந்த அரசாங்கம் எதிராகச் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையுடன், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப் பெரிய அடியும் ஒரு கருப்பு நாளுமாக அமையும்.
அரசாங்கத்தின் இந்தச் சர்வாதிகாரப் போக்கினை எதிர்த்து நாட்டின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பியுள்ள போதிலும், ஜனாதிபதி குறைந்தபட்சம் அதற்கு முறையான பதிலளிக்கக் கூட முன்வரவில்லை. மேலும், இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் (சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர்), உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் 60 பேர், அரச மருத்துவ சங்கம், பொறியியலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஏற்கனவே தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், நேற்றையதினம் (வியாழக்கிழமை) மழைச் சூழலையும் தாண்டி மக்கள் தங்கள் உரிமைகளுக்காக வீதிக்கு இறங்கிப் போராடியுள்ளனர். எனினும், வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் நுழைவாயில்கள் அனைத்தையும் திறந்துவிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை உள்ளே நுழையச் செய்து, வேண்டுமென்றே குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. தங்களது தரப்பினர் எத்தகைய வன்முறைகளையோ பாராளுமன்றத்திற்குத் தீ வைப்பதையோ நோக்கமாகக் கொண்டவர்கள் அல்லவென்றும், மாறாக விதிகளுக்குட்பட்ட ஒழுக்கமானவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வன்முறைகளில் ஈடுபட்டுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களே இன்று அதிகாரத்தில் இருப்பதாகவும், பொலிஸாரைக் கொண்டு இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாராளுமன்றத்தை மட்டுமல்லாமல், கிராமிய மட்டங்களில் உள்ள பாதுகாப்புச் சபைகள், விவசாயச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களிலும் தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் கைப்பற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்த் தியாகங்களினால் வென்றெடுக்கப்பட்ட இந்த ஜனநாயக உரிமைகளைச் சில தரப்பினர் அழிக்க முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த 22ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறின் இதற்கெதிரான அனைத்துப் போராட்டங்களையும் மிகத் தீவிரமாகத் தொடர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
