எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மந்திரலோசனைகளை நடத்தி வருகிறார்.
இன்று கட்சியின் அமைப்பாளர்களை கட்சித் தலைமையகத்தில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ள மைத்ரி ,தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் அவர்களின் அபிப்பிராயங்களை கோரவுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி தேர்தல் வேளையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமை ,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் உரிய இடம் அளிக்கப்படாமை ,வரும் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டுமென்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களது வலியுறுத்தல் போன்ற விடயங்களால் மைத்ரி கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிந்தது.
இதனால் பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பின்னர் பெரும்பான்மை பெரும் தரப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது குறித்து மைத்ரி இப்போது மந்திரலோசனைகளை நடத்தி வருகிறார் என மேலும் சொல்லப்பட்டது.
