100 வருடங்கள் பழைமை வாய்ந்த கம்பஹா, மஹர தேர்தல் தொகுதியிலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாயலில் சிறை அதிகாரிகளினால் தற்போது புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
ராகம பகுதி மக்கள் தொழுகைக்காக பயன்படுத்தி வந்த குறித்த பள்ளிவாயல் முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இடத்தில் அமையப் பெற்றதாகும். கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் கூறப்பட்டு குறித்த பள்ளிவாயலில் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டு அதிகாரிகளினால் பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகளுக்கு தேவையான சந்தூக் பெட்டி போன்றவை கூட மாபோலை பெரிய பள்ளிவாயலில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் தான் குறித்த பள்ளிவாயல் கட்டடம் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதுடன் அங்கு புத்தர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
