Our Feeds


Tuesday, February 25, 2020

www.shortnews.lk

PJ, Dr ஸாகிர் நாயக் அகியோர் 04/21 குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கை வந்து சென்றதாக பொய்யான செய்தி வெளியிட்டது டெய்லி மிரர் & லங்காதீப

 


தமிழகத்தின் பிரபல இஸ்லாமிய அறிஞரும், திருக்குர்ஆனை எளிய தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவரும், பிரபல பேச்சாளருமான பி. ஜெய்னுலாப்தீன் (PJ) மற்றும் பிரபல ஆங்கில மொழி இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர் ஸாகிர் நாயக் உள்ளிட்டவர்கள் இலங்கையில்  கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் பின்னர் இலங்கை வந்து சென்றுள்ளதாக லங்காதீப மற்றும் டெய்லி மிரர் போன்ற பத்திரிக்கைகள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவினால் பாராளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மேற்கொள் காட்டியே மேற்கண்ட செய்தியை குறித்த பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.

குறித்த இரண்டு அறிஞர்களும் 04/21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் எதிர்காலத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துடன் பாதுகாப்பு பிரிவு இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 25.02.2020 லங்காதீப சிங்கள மொழி பத்திரிக்கையில் முதன்மை செய்தியாகவும், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிக்கை தனது முதன்மை செய்தியாகவும் இதனை வெளியிட்டுள்ளன.

தமிழக இஸ்லாமிய அறிஞரான பி.ஜெய்னுலாப்தீன் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்து வருவதுடன் தமிழுலகறிந்த பிரபல பேச்சாளருமாவார்.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், தமிழக முன்னால் முதல்வர்களான ஜெயலலிதா, மு. கருணாநிதி மற்றும் பல அரசியல் முக்கியஸ்தர்களுடன் சமூக அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பல சந்திப்புக்களை இவர் மேற்கொண்டுள்ளதுடன், தற்போதும் NFT - தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் பல சமூக பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பல உரைகளை ஆற்றியுள்ள ஜெய்னுலாப்தீன் புனித அல்-குர்ஆனை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளதுடன் அவர் மொழிபெயர்த்த திருக்குர்ஆனின் விளக்கவுரையில் பயங்கரவாதத்திற்கு எதிராக பல தலைப்புகளில் எழுதியுமுள்ளார்.

2005ம் ஆண்டு இலங்கை அழைத்து வரப்பட்ட ஜெய்னுலாப்தீன் இலங்கையில் பல பகுதிகளிலும் இஸ்லாமிய பிரச்சார நடவடிக்கைகளில் பகிரங்கமாக கலந்து கொண்டார். 

2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவில்லை. 

இந்த நிலையில் தான் ஜெய்னுலாப்தீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை வந்ததாக பொய்யான தகவலை லங்காதீப மற்றும் டெய்லி மிரர் ஆகியவை எழுதியுள்ளன.

அதோ போல் தற்போது மலேசியாவில் வசித்து வரும் டாக்டர் ஸாகிர் நாயக் அவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை வந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொய்யான தகவலை மேற்கண்ட இரண்டு பத்திரிக்கைகளும் ஜோடித்துள்ளன. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »