ஒரு இனத்தை சுட்டிக்காட்டும் வகையில் புர்கா, நிகாப் என்ற ஆடைகளை குறிப்பிடாமல் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத, சிரமமான முக மறைப்புகள் மற்றும் கவசங்களை தடை செய்ய வேண்டும் என தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு பாராளுமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அல்லது கவசங்கள் அணிபவர்களை பிடியானை இன்றி கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் மலிக் ஜயவிக்ரமவினால் சமர்பிக்கப்பட்ட பரிந்துரைகளிலேயே இது உள்ளடக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் புர்காவும், அபாயாவுமே பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் இது சமூகத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.
மரியாதையாக வாழ நினைக்கும் பெண்கள் தமது கணவர் தவிர்த்து மற்ற ஆண்களுக்கு தமது முகத்தை காட்ட நினைக்காத காரணத்தினால் தான் இந்த ஆடையை அணிவதாக வாதம் முன்வைத்தாலும் இந்த புதுவகையான அரேபிய ஆடைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முகத்தை மறைக்கும் குறித்த ஆடைக்கு வெளிநாடுகள் பலவும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பல நாடுகளும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 2019 ஏப்ரல் 30ம் திகதி முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கு ஜனாதிபதி தடை விதித்தார்.
அதே போல் அப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் கடந்த 17.07.2019 அன்று முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கு தடை விதிக்கும் பிரேரனை ஒன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட போதும் அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்களின் எதிர்பினால் அது கைவிட பட்டது.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு பெண்கள் அணியும் முகத்திரை விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தியது.
முகத்திரை அணிவதை நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் குற்றமாக அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே முகத்தை மறைத்து ஆடை அணிவதை குற்றவியல் சட்டத்திற்கமைய ஒரு குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் எமது குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய ஒரு இனத்தை சுட்டிக்காட்டும் வகையில் புர்கா, நிகாப் என்ற ஆடைகளை குறிப்பிடாமல் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத, சிரமமான முக மறைப்புகள் மற்றும் கவசங்களை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடுவது பொறுத்தமானது என எமது குழுவில் கருத்து முன்வைக்கப்பட்டது. நிகாப் புர்கா என்று குறிப்பிட்டு தடை செய்வது ஒரு இனத்தை குறிப்பிடுவதாக அமைந்து விடும் என்பதினாலேயே இப்படி தடை விதிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. என தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
