கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஒரு இலட்சம் பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு அந்த பிரதேசங்ளிலிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அதேபோன்று ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இப்பிரதேசங்களுக்கள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
எனினும் இந்தப் பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளை ஏற்றுவதற்கோ, இறக்குவதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது.
வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருமே சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை முறையாக பின்பற்றும்போதே , தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியதாக இன்று (25) வெள்ளிக்கிழமை காலை 6.00 வரை 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியதாக 1, 794 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
