Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

குழந்தைகளை விற்பனை செய்து வந்த பேபி பார்ம் சுற்றிவளைப்பு

 



(எம்.எப்.எம்.பஸீர்)


குழந்தைகளை, சட்டவிரோதமான முறையில் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து வந்த, வெளிநாடுகளில் ‘ பேபி பார்ம்’ (குழந்தை பண்ணை) எனும் சொற் பதத்தால் அறியப்படும் நிலையங்களை ஒத்த இரு நிலையங்களை பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் சுற்றிவளைத்துள்ளது.


மொரட்டுவை, ஹல்தமுல்ல, சிபிடி சில்வா மாவத்தை மற்றும் தஹம் மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இயங்கிய இரு நிலையங்களே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டன.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான அல்லது, வேறு நிலைமைகள் காரணமாக குழந்தை கருவில் இருக்கும்போதே தாய்மாருடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்து, அக்குழந்தைகள் பிறந்ததும் மூன்றாம் தரப்பினருக்கு இந்த நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இது தொடர்பிலான பிரதான சந்தேக நபரை மாத்தளை உக்குளையில் வைத்து கைது செய்ததாக கூறினார்.

சுமார் 30 குழந்தைகள் வரை இவ்வாறு சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த விசாரணைகளில், மொரட்டுவை நீதிமன்றில் பெற்றுக் கொண்ட விசேட சோதனை அனுமதிக்கு அமைய மொறட்டுவையில் உள்ள குறித்த நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கர்ப்பிணி தாய்மார்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 தாய்மார்களின் குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு பணத்துக்காக ஏற்கனவே விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் 3 குழந்தைகள் அவர்களது தாய்மாருடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 12 கர்ப்பிணிகள், குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்கும் சட்ட விரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தேக நபரால் பராமரிக்கப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது.

பிரதான சந்தேக நபர், இணையத்தில் வெளியிட்ட குழந்தை ஒன்றை கையில் ஏந்திய நிலையிலான வீடியோ ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குறித்த வீடியோ, குழந்தை விற்பனைக்கான விளம்பரமாக அந்நபரால் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

தண்டனை சட்டக் கோவையின் 360 ஆவது அத்தியாயத்துக்கு அமைய மனிதக் கடத்தல் பாரிய குற்றமாக கருதப்படுவதுடன், அந்த குற்றச்சாட்டின் கீழ் இந்தக் குழந்தை விற்பனை விடயமும் உள்ளடங்கும் என சுட்டிக் காட்டிய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சந்தேக நபரை மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »